தேச நிர்மான அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

2008ம் ஆண்டு கருணா தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தார்.

ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க பதவி விலகியதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு கருணா தெரிவு செய்யப்பட்டார்.

எவ்வாறெனினும், இம்முறையும் கருணா தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவாரா என்பது குறித்து தெளிவாக குறிப்பிட முடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இது குறித்து நடவடிக்கை எடுப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றைய தினம் மாலை வேட்பு மனுக்களில் கைச்சாத்திட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

மூன்று முஸ்லிம் வேட்பாளர்களும், ஐந்து தமிழ் வேட்பாளர்களும் தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.