பொதுத் தேர்தலின் பின்னர் அமைக்கப்படும் அரசாங்கத்தின் அமைச்சர்களின் எண்ணிக்கையை 35ஆக குறைக்கப் போவதாக ஜனாதிபதி தெரிவித்ததை அடுத்து தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் புதிய வேட்பாளர்கள் உற்சாகம் இழந்திருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலைமையில் கடந்த மாகாண சபைத் தேர்தலில் பல கோடி ரூபா பணத்தை செலவிட்ட துமிந்த சில்வா மற்றும் திலங்க சுமதிபால போன்றவர்கள் கூட இம்முறை பணத்தைச் செலவிட முன்வரவில்லையென்பது தெளிவாகத் தெரிய ஆரம்பித்துள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல கோடி ரூபா செலவிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மாத்திரம் பெறுவது போதிய பலனளிப்பதாக அமையாது என பல புதிய வேட்பாளர்கள் கருதுகின்றனர்.

இந்தத் தகவல்களின் அடிப்படையில், இம்முறை பொதுத் தேர்தலுக்கு அதிகளவில் பணத்தைச் செலவிட்டு வருபவர் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச எனத் தெரியவந்துள்ளது.

விமல் வீரவங்ச இதுவரை 100 மில்லியன் ரூபா பணத்தை கொழும்பு மாவட்ட ஏற்பாட்டு நடவடிக்கைகளுக்காக செலவிட்டுள்ளார்.


சிறீலங்காவின் ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியானது, புலம்பெயர் தமிழர் போராட்டங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிங்கள இணைய தளம் கூறியுள்ளது.

சிறீலங்காவில் 350 ஆடை தொழிற்சாலைகள் இயங்குகின்றன. மூன்று இலட்சம் தொழிலாளர்கள் இந்த தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்றார்கள். 2008 ஆம் ஆண்டு நான்காயிரம் கோடி ரூபாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு இந்த அடைவினை எட்ட முடியாது என கூறப்பட்டுள்ளது.

மேற்கூறிய ஆய்வினையும் எதிர்வு கூறலையும் உள்ளடக்கியுள்ள அந்த கட்டுரையானது இந்த பின்னடைவுக்கு காரணம் ஐரோப்பிய ஒன்றியம் வரி சலுகையினை நிறுத்தியுள்ளமை, அமெரிக்காவில் புலம்பெயர் மக்கள் நடத்தும் இலங்கை ஆடை கொள்வனவு செய்வதனை புறக்கணிக்கும் போராட்டம், பிரித்தானியாவில் நடைபெற்ற போராட்டங்களை சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

சிறீலங்கா அரசு எப்படித்தான் சில விடயங்களை மூடி மறைத்தாலும், அல்லது சாதகமாக விவாதித்தாலும் உண்மை என்னவெனில் சிறீலங்கா ஆடை ஏற்றுமதியில் வீழ்ச்சியினை சந்திக்கின்றது என்பதனை மாற்றவோ, மறுக்கவோ முடியாது எனவும் கூறப்பட்டுள்ளது.

சிறீலங்கா அரசாங்கம் ஐரோப்பிய சந்தைகளையும் அமெரிக்க சந்தைகளையும் இழந்து கொண்டிருக்கின்றது. இந்த இழப்புக்களுக்கு காரணமாக இன்னொரு முக்கிய காரணி இருக்கின்றது. அதாவது சிறீலங்கா அரசாங்கம் போர்க்குற்றத்தில் ஈடுபட்டுள்ளது என்ற உலகளாவிய பிரச்சாரமும் குற்றச்சாட்டும் இதற்கு உதாரணமாகும்.

ஐரோப்பிய, அமெரிக்க சந்தைகள் சிறீலங்கா ஆடைகளின் ஏற்றுமதியில் 50 விழுக்காடு நுகர்வினை உள்வாங்குகின்றன. இந்த 50 விழுக்காடு ஏற்றுமதிக்கான சந்தைகளை உடனடியாக வேறு இடங்களில் பெற்றுக்கொள்ள முடியாது. ஆசியாவில் அரசாங்கம் பெற முடியும் என நம்புவது, பிரச்சாரம் செய்வது போலியானது எனவும் அந்த கட்டுரை தெரிவிக்கின்றது.

இந்தோனேசியாவின் மெரேக் துறைமுகத்தில் உள்ள படகில் உள்ள இலங்கை அகதிகளின் பேச்சாளர் அலெக்ஸ் இந்தோனேசிய அதிகாரிகளினால் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக இந்தோனிசியாவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அகதிகள் உண்ணாவிரதத்தைக் மேற்கொண்டு தற்போது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டுள்ளனர்.

குடிவரவு அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று நாட்களுக்குள் ஐநா அகதிகள் தொடர்பான அதிகாரிகளை குறித்த இடத்திற்கு அழைத்து வர இந்தோனிசிய குடிவரவு அதிகாரிகள் இணங்கியுள்ளதாகவும் இதனைத் தொடர்ந்தே தாம் கடந்த 7 நாட்களாக நடத்தி வந்த உண்ணாவிரதத்தைக் கைவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகளை தற்போதைய நிலையில் விடுதலை செய்ய முடியாது என சிறிலங்கா படையைச் சேர்ந்த பிரிகேடியர் சுகந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

போராளிகளை விடுதலை செய்யும்படி சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட மனித உரிமைகள் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையிலேயே அரசின் இந்தக் கருத்து வெளிவந்துள்ளது.தற்போது 10,732 பேர் தம்மால் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ள ரணசிங்க இவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்பே விடுவிக்கப்படுவர் என்றும் இதற்கு பல ஆண்டுகள் செல்லலாம் எனவும் தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே ஏற்கனவே 14,000 போராளிகள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருந்த சிறீலங்கா அரசாங்கம் தற்போது 10 732 பேர் மட்டுமே தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக அறிவித்திருப்பதன் மூலம் எஞ்சியவர்களுக்கு என்ன நடந்தது என்ற சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

வடக்கிலும் போட்டி ரி.எம்.வி.பி

Posted by maanamulathamilan On AM 12:10 Categories:

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி எதிர்வரும் பொதுத் தேர்தலில் வடக்கிலும் போட்டியிடவுள்ளது. இத் தகவலைக் கட்சியின் பேச்சாளர் ஆசாத் மெளலானா தெரிவித்துள்ளார்.

வட பதி மக்களின் வேண்டுகோளின் பேரில் தமது கட்சி வன்னி மாவட்டத்திலும் யாழ்ப்பாண மாவட்டத்திலும் தமது வேட்பாளர்களை நிறுத்த வுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இவர்களின் வேட்புமனுத் தாக்கல்கள் நாளை 23 ஆம் திகதி நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமது கட்சி கிழக்குப் பிராந்தியத்திற்கு மாத்திரம் உரித்தான கட்சி அல்ல. அது சகல பிராந்திய மக்களுக்கும் உரித்தான கட்சி என்ற அடிப்படையிலேயே இந்த முடிபு எடுக்கப்பட்டுள்ளதாக ஆசாத் மெளலானா கூறியுள்ளார்.


எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கா 8 ஆயிரம் உள்ளுர் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்தவுள்ளதாக பவ்ரல் அமைப்பு அறிவித்துள்ளது.

இதேநேரம் அனைத்து மாவட்டங்களில் கண்காணிப்பு நடவடிக்கைக்காக 50 வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்தவுள்ளது.

உள்ளுர் கண்காணிப்பாளர்கள் 1500 பேர் சுயாதீனமான கண்காணிப்பாளர்களாக பொதுவான கண்காணிப்பில் ஈடுபடுவர் என பவ்ரல் அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.