skip to main | skip to sidebar

ஈழமண்

    Followers

ஈழமண்

  • முகப்பு
  • சிறப்பு கட்டுரைகள்
  • இந்தியா
  • சினிமா
  • திரைவிமர்சனம்
  • தினப்பலன்

விடுதலைப் புலிகள் தொடர்பான வழக்கு ஒன்றில் அமெரிக்க உச்ச நீதிமன்றில் வாதாட உள்ளார் உருத்திரகுமாரன்

Posted by maanamulathamilan On 12:07 AM Categories:

விடுதலைப் புலிகள் தொடர்பான வழக்கு ஒன்றில் முதல் தடவையாக தமிழ் சட்டவாளர் ஒருவர் அமெரிக்க உச்ச நீதிமன்றில் தோன்றி வாதாட இருக்கிறார்.

நியூயோர்க் வாழ் ஈழத் தமிழரான விஸ்வநாதன் உருத்திரகுமாரனே அமெரிக்க நீதிமன்றத்தில் நாளை செவ்வாய்க்கிழமை [23-02-10] வாதாட உள்ளார்.

அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தால் தீவிரவாதிகள் எனப் பட்டியலிடப்பட்டிருக்கும் அமைப்புக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கப்படுவதைக் கட்டுப்படுத்தும் சட்டங்களுக்கு எதிராக அவர் வாதாடுவார்.

மனிதாபிமான உதவிகள் மற்றும் உதவி செய்தலுக்கும் தீவிரவாத அமைப்புக்களுக்கு உதவி நிற்பதற்கும் இடையிலான வேறுபாடுகளை வரையறுக்கும்படி அவர் நீதிமன்றத்தில் வாதாடுவார்.

யார் தீவிரவாதிகள் என்பதை வரையறுப்பது கடினமானது என்பது பற்றியும், அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை உதவிகளை வழங்குவதையும் தீவிரவாதிகளுக்கோ தீவிரவாதத்திற்கோ ஆதரவளிப்பதையும் ஒன்றாகப் பார்க்க முடியாது என்பது பற்றியும் அவர் வாதாட உள்ளார்.

தற்போதுள்ள நடைமுறைகளின்படி, இராஜாங்கத் திணைக்களத்தால் வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்புக்கள் எனப் பட்டியலிடப்பட்டுள்ளவற்றிற்கு வழங்கப்படும் மனிதார்ந்த உதவிகள் உள்ளிட்ட எந்தவொரு உதவியும் அமெரிக்க தேசப்பற்றுச் சட்டத்தின் கீழ் குற்றமாகும்.

விஸ்வநாதன் உருத்திரகுமாரன்தான் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் முன் தோன்ற உள்ள முதல் ஈழத் தமிழ் சட்டவாளர் என்று மனித உரிமைகள் ஆணையக செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றமே அமெரிக்காவில் உள்ள அதி உயர் நீதி நிறுவனமாகும்.

உருத்திர குமாரனின் இந்த நடவடிக்கை, விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் ஈழத் தமிழர்களின் பாதுகாப்பு மற்றும் விடுதலைக்காகப் புலம்பெயர் தமிழர்கள் சட்டரீதியான மற்றும் வேறு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கி விட்டார்கள் என்பதையே காட்டுகின்றது எனவும் மனித உரிமைகள் ஆணையகக் குறிப்பு கூறுகின்றது.


புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
© All Rights Reserved. ஈழமண்
Designed by Web2Feel | Converted into Blogger Templates by Theme Craft